இன்று டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி - இந்தியா vs இங்கிலாந்து பலப்பரிட்சை!
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இன்று நடப்புச் சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வான்கேடே மைதானத்தில் இந்த விறுவிறுப்பான ஆட்டம் நடைபெறவுள்ளது.
சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில், சஞ்சு சாம்சனின் அதிரடியான 97 ரன்கள் (நாட் அவுட்) உதவியுடன் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இன்று மும்பை வான்கேடே மைதானத்தில், இரவு 7 மணிக்கு போட்டி துவங்குகிறது. இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் இந்தப் போட்டியை நேரலையில் காணலாம்.
சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் மட்டும் தோல்வியடைந்த இந்தியா, மற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் (231 ரன்கள்) மற்றும் இஷான் கிஷன் (224 ரன்கள்) பேட்டிங்கில் வலுவாக உள்ளனர். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 12 விக்கெட்டுகளுடன் முன்னிலையில் உள்ளார்.
அதே சமயம் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, சூப்பர் 8 சுற்றில் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு வந்துள்ளது. குறிப்பாக ஹாரி புரூக் பாகிஸ்தானுக்கு எதிராகச் சதம் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளார்.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (C), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இந்திய அணியில் இருப்பர்..
மும்பையில் இன்று வெப்பம் அதிகமாக இருக்கும். மழை பெய்ய வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் முழுமையான ஆட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வான்கேடே மைதானம் எப்போதும் பேட்டர்களுக்குச் சாதகமாக இருக்கும். பனித்தாக்கம் காரணமாகப் பின்தொடர்ந்து பேட்டிங் செய்யும் அணிக்குச் சாதகமான சூழல் இருக்கலாம்.
இது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் நேருக்கு நேர் மோதும் மூன்றாவது தொடர்ச்சியான முறையாகும் (2022, 2024 மற்றும் 2026). 2022-ல் இங்கிலாந்தும், 2024-ல் இந்தியாவும் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. இன்று வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.