இன்று கோவை கோனியம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா!
கோயம்புத்தூரின் காவல் தெய்வமாகவும், நகரின் ஆதி தெய்வமாகவும் போற்றப்படும் அருள்மிகு கோணியம்மன் திருக்கோவில் மாசித் திருவிழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் நடந்து முடிந்த நிலையில் இன்று பரிவேட்டை நடைபெறுகிறது.
கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியான தேரோடும் வீதியில் அமைந்துள்ள இந்தக் கோவிலில், கடந்த வாரம் பூச்சாட்டு மற்றும் கொடியேற்றத்துடன் மாசித் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தூய வெள்ளை நிறத்தில் அன்னப் பறவை வடிவிலான வாகனத்தில், பட்டு வஸ்திரங்கள் மற்றும் வைர வைடூரிய ஆபரணங்கள் சூடி கோணியம்மன் அலங்கரிக்கப்பட்டார். மாலையில் மேளதாளங்கள் மற்றும் மங்கல இசை முழங்க, அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளிலும் திருவீதி உலா வருகிறார்.
அன்னம் என்பது தூய்மை மற்றும் ஞானத்தின் அடையாளமாகக் கருதப்படுவதால், இந்த வாகனத்தில் அம்மனைத் தரிசிப்பது வாழ்வில் அறியாமை நீங்கி நலம் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வீதியெங்கும் பக்தர்கள் திரண்டு நின்று தேங்காய், பழம் படைத்து அம்மனுக்கு 'மகா தீபாராதனை' காட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தைத் தொடர்ந்து இன்று மார்ச் 5ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளும் பரிவேட்டை நிகழ்வும், நாளை மார்ச் 6-ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளன.