திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம்!

 | 
At Tiruvanamalai devotees health checkup

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையில் நடைபெறும் அபிஷேக தரிசனத்தில் பங்கேற்கும் பக்தர்களின் உடல்நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அனைத்து பக்தர்களுக்கும் மருத்துவ பரிசோதனை கட்டாயம் என்ற தகவல் வெளியான நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

திருவண்ணாமலை கோவிலில் அபிஷேக தரிசனத்தின்போது பக்தர்கள் சன்னதியில் நீண்ட நேரம் அமர்ந்து தரிசனம் செய்கின்றனர். சாமி சன்னதியில் சுமார் ஒரு மணி நேரமும், அம்மன் சன்னதியில் சுமார் 30 நிமிடங்களும் பக்தர்கள் அமர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, அபிஷேக தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் தேவையானவர்களுக்கு ORS பானம் வழங்கவும், உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனை மற்றும் உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.முக்கியமாக, அபிஷேக தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை கட்டாயம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான பக்தர்களுக்கு மட்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோவில் நிர்வாகம் சார்பில் வெளியான ஆரம்ப தகவலில், அபிஷேக தரிசனத்தின்போது சில பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கருவறை அபிஷேக தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 

நவம்பர் 24-ம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ள நிலையில், பக்தர்கள் பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags