திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி... "பக்தர்களிடம் கெடுபிடி காட்டாதீங்க" - காவலர்களுக்கு டி.ஐ.ஜி. அறிவுரை!

 | 
DEVOTIONAL

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில் நாளை மார்ச் 6ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இது குறித்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்குப் புதுச்சேரி டி.ஐ.ஜி. முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி, நாளை காலை 8:24 மணிக்குச் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்கிறார். இந்த நிகழ்வை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருநள்ளாறு கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள காவலர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். 

நீண்ட தூரத்திலிருந்து வரும் பக்தர்கள் மன அழுத்தத்துடனும் களைப்புடனும் இருப்பார்கள். எனவே, கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் காவலர்கள் பக்தர்களிடம் எவ்விதக் கெடுபிடியோ அல்லது கடுமையான போக்கோ காட்டக்கூடாது.பக்தர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, கனிவான முறையில் அவர்களை வழிநடத்த வேண்டும் என டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

சனிப்பெயர்ச்சி விழாவிற்காகத் திருநள்ளாறு முழுவதும் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது: சுமார் 1,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த 200 மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள் கூடுதலாகத் திருநள்ளாறு பாதுகாப்புப் பணியில் இணைக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலைக் கண்காணிக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

நாளை காலை 8:24 மணிக்கு சனிப் பெயர்ச்சி நேரத்தில், சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறவுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்குத் தடையற்ற குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் மற்றும் வரிசை முறைக்காகப் பிரத்யேகப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கெனத் தனிப்பாதைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Tags