சந்திர கிரகண நேரத்தில் இந்த ஸ்லோகம் சொல்ல மறக்காதீங்க - பரிகார நட்சத்திரங்கள் இவை தான்!
இன்று மார்ச் 3நிகழும் இந்த ஆண்டின் முதல் முழுச் சந்திர கிரகணம், ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாகச் சந்திரன் கேதுவுடனும், சூரியன் ராகுவுடனும் இணைந்திருக்கும் இந்த வேளையில், குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தோஷ நிவர்த்திக்காகப் பரிகாரங்களைச் செய்வது அவசியம்.
இந்தக் கிரகணம் பூரம் நட்சத்திரத்தில் நிகழ்வதால், பூரம் (கிரகணம் நிகழும் நட்சத்திரம்), பரணி மற்றும் பூராடம் (ஒரே அதிபதியைக் கொண்ட நட்சத்திரங்கள்), மகம் மற்றும் உத்திரம் (முன், பின் நட்சத்திரங்கள்) ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவசியம் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும்:
கிரகணம் முடிந்த பிறகு (இரவு 7:53-க்கு மேல்) குளித்துவிட்டு, நெற்றியில் திருநீறு அணிந்து அருகிலுள்ள சிவன் அல்லது விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஏழைகளுக்கு ஆடை, உணவு அல்லது பணம் ஆகியவற்றை உங்களால் முடிந்த அளவு தானம் செய்வது பல மடங்கு நற்பலன்களைத் தரும்.
கிரகணத்தின் போது சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த ஸ்லோகம்
கிரகணக் காலத்தில் மந்திரங்களை உச்சரிப்பது பல ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்பது நம்பிக்கை. கிரகண தோஷங்கள் நம்மை அண்டாமல் இருக்க, "இந்த்ரோ (அ)நலோ தண்டத ரஸ்ச ருக்ஷ :
பாசாயுதோ வாயு குபே ர ஈஸா:
குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராஸிஸ்த்த
சந்த்ர க்ரஹ தோஷ சாந்திம்" என்கிற ஸ்லோகத்தைக் காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு குறைந்தது மூன்று முறை பாராயணம் செய்யவும்:
எட்டுத் திசைகளையும் காக்கும் தேவர்கள், என் நட்சத்திரத்திலும் ராசியிலும் சஞ்சரிக்கும் சந்திரனால் ஏற்படும் கிரகண தோஷங்களை நீக்கி, எனக்குச் சாந்தியும் நன்மையும் வழங்க வேண்டுகிறேன் என்பது இதன் பொருளாகும்.
இன்று பிற்பகல் 3:20 மணிக்குத் தொடங்கி இரவு 7:53 மணி வரை கிரகணம் நீடிக்கும். சந்திர கிரகணம் என்பதால், பௌர்ணமி முடியும் நேரமான மாலை 5:52 மணிக்கு மேல் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். இந்த நேரத்தில் 'ஓம் நமசிவாய' அல்லது உங்களுக்கு உபதேசம் செய்யப்பட்ட மந்திரங்களை ஜபிப்பது விரைவில் சித்தியை (வெற்றியை) தரும். கிரகணம் முடிந்த பிறகு கோயிலுக்குச் சென்று மட்டைத் தேங்காய் அல்லது தானியங்களைத் தானமாக வழங்குவது சிறந்தது.
இந்தக் கிரகண கால வழிபாடுகள், கடந்த காலங்களில் நிலவிய போர் மற்றும் பொருளாதாரச் சரிவு போன்ற உலகளாவிய பிரச்சனைகள் முடிவுக்கு வரவும், தனிப்பட்ட வாழ்வில் அமைதி ஏற்படவும் உதவும் என நம்புகின்றனர்.