“அமைதிக்கான நோபல் பரிசு எனக்குத் தான்..” - டிரம்ப் மீண்டும் புலம்பல் | இன்று வெளியாகும் மாஸ் அறிவிப்பு!
உலகின் மிக உயரிய நோபல் பரிசுகளில் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், தனக்குத்தான் அந்த விருது வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "வேறு எந்த உலகத் தலைவரும் செய்யாத சாதனைகளை நான் செய்துள்ளேன். இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை; உண்மையைத்தான் கூறுகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதுவரை எந்தவொரு தலைவரும் போர்களை முடிவுக்குக் கொண்டுவந்ததில்லை எனக் குறிப்பிட்ட அவர், தான் இதுவரை 8 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார்.
"என்னைப் போன்றவர்களுக்கு விருது வழங்காத ஒரு போக்கு நோபல் பரிசு கமிட்டியிடம் உள்ளது. எனக்கு அந்த விருதை வழங்காவிட்டால் அது அவர்களுக்குத்தான் பெரும் அவப்பெயராக அமையும்" என்று அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவைக் குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், "ஒபாமாவை விட நோபல் பரிசைப் பெற நான் அதிக தகுதியுடையவன். 2009-ஆம் ஆண்டில் தனக்கு ஏன் நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது என்பது ஒபாமாவுக்கே தெரியாது" எனவும் விமர்சித்தார்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தனக்கு வழங்கப்பட வேண்டும் என டிரம்ப் வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.