வெற்றுத் தாளில் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து? முதல்வர் விஜய் கூட்டத்தில் நடந்தது என்ன?

 | 
TVK MLA'S signed in white paper in assembly ?

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சிலரிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து பெறப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தவறுகளைத் திருத்திக்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்ததாக கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறப்படும் சில எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். 

ராஜினாமா கடிதம் தயாரிக்கவா? 

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து பெறப்பட்டதாகவும், எதிர்காலத்தில் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் ராஜினாமா கடிதம் தயாரிக்க அவை பயன்படுத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள், சிலர் மீதான புகார்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் நகர்வுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், வெற்றுத் தாளில் கையெழுத்து பெறப்பட்டதன் நோக்கம் குறித்து தமிழக வெற்றிக் கழகமோ, முதலமைச்சர் அலுவலகமோ அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்ததாகத் தகவல் இல்லை.

Tags