அரசு ஊழியர்களுக்கு புரொமோஷன் கட்... அக்.31க்குள் சொத்து விவரங்களைப் பதிவு செய்ய உத்தரவு
தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் முழு சொத்து விவரங்களையும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும், அசையா சொத்துகள், சேமிப்புகள் மற்றும் கடன்கள் குறித்த அனைத்து விவரங்களையும் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்கள் வேறு யார் பெயரிலும் சொத்துகள் வாங்கியிருந்தாலும் அவற்றைக் குறிப்பிட வேண்டும். மேலும், அந்த நபருக்கும் அரசு ஊழியருக்கும் என்ன உறவுமுறை என்பதையும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து மதிப்புகளைத் தாக்கல் செய்யும் அரசு ஊழியர்களின் பெயர்கள் மட்டுமே அவர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறும். தவறுபவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாது.
சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யத் தவறும் பட்சத்தில், அது அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை மீறிய செயலாகக் கருதப்படும் என்றும் தலைமைச் செயலாளர் சாய்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் இந்த அதிரடி உத்தரவு அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.