“இன்றைக்கும் என்னை தவறாக சித்தரித்து...” - மேயர் பிரியா சரமாரி குற்றச்சாட்டு!

 | 
"Even today, they are misrespecting me...." Mayor Priya makes a series of accusations!

சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா,சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்றைக்கு ஆட்சியை அமைத்திருக்கும் தவெக அரசு, மே மாதம் முதலே மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளை ரத்துச் செய்துள்ளது. மாநகராட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை. இதுகுறித்து திமுக சார்பில் நிறைய இடங்களில் கண்டனங்களைப் பதிவுச் செய்திருக்கிறோம்.

இதைத் தாண்டி இன்றைக்கு விர்ச்சுவல் வாரியஸ் (Virtual Warriors) என்று சொல்லக்கூடிய விர்ச்சுவல் அபியூசர்ஸ் அனைவரும் சமூக வலைத்தளங்களில் என்னை தவறாக சித்தரிக்கின்றனர். என்றைக்கெல்லாம் நான் மேடையில் தவெக அரசைக் கண்டித்தும், தவெக அரசு நிர்வாகத்தின் சீர்கேட்டைக் கண்டித்தும் பேசுகின்றனோ, அதற்கு மறுநாளே, என்னை தவறாக சித்தரித்து ஏஐ மூலமாக வீடியோவை எடிட் செய்து, திமுகவினரையும் தவறாகச் சித்தரித்து வீடியோக்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புகின்றனர்.

பொதுமக்கள் மத்தியில் இந்த மாதிரி வீடியோக்கள் பரவுவது, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதித்துள்ளது. இதுகுறித்து, நான் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். புகார் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்றைக்கும் என்னை தவறாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து இன்றைக்கும் நான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன். இதற்கான நடவடிக்கையாவது தவெக அரசு எடுக்குமா? என்று கேட்டால் அது கேள்விக் குறியான விஷயம் தான்.

பெண்களுக்கான பாதுகாப்பு, பெண்களுக்கான உரிமை வழங்கப்படும் என்று பேசினார்கள். ஆனால், ஒரு மேயராக, பெண்ணாக இருக்கக்கூடிய நான் பலமுறை இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பேசியும் மௌனம் காக்கும் முதலமைச்சர் தான், இன்றைக்கு இருக்கக் கூடிய முதலமைச்சர். இதற்கான பதில் எப்போது வரும்? என்பதை கேள்வியாகவே வைக்கிறேன்.

சென்னையில் மாமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய சகோதரி, மேடையில் பேசியதற்கு அவரை அதே இடத்தில் வைத்து திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டித்தார். அதே மேடையில், மாவட்ட திமுக செயலாளரான சேகர் பாபுவும் கண்டித்தார். இதேபோல், ஏதாவது ஒரு இடத்தில் தவெக நிர்வாகிகளையோ, தவெகவில் நடைபெறும் தவறுகளையோ, முதலமைச்சரோ, அமைச்சர்களோ கண்டித்ததாக ஏதாவது ஒரு தகவல் இருக்கிறதா?

விர்ச்சுவல் அபியூசர்ஸை வைத்துக் கொண்டு இன்றைக்கு ஆட்சியமைத்திருக்கக் கூடியவர்கள், பெண்களை இழிவாகப் பேசி, பெண்களை மிகவும் தவறாகச் சித்தரிக்கக் கூடிய அரசாக தவெக அரசு இருக்கிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மக்களுக்கான எனது பணியைத் தொடர்ந்துச் செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags