புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியைக் கைப்பற்றியது என்.ஆர்.காங்கிரஸ் - அசோக் ஆனந்த் அபார வெற்றி!
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
முதலமைச்சர் என். ரங்கசாமி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
பதிவான வாக்குகளின் எண்ணிக்கையின்படி, காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை விட 8,474 வாக்குகள் வித்தியாசத்தில் அசோக் ஆனந்த் பெருவெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தட்டாஞ்சாவடி தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தன் வசமே தக்கவைத்துக் கொண்டுள்ளது.