சனிப்பெயர்ச்சி - எந்தெந்த ராசிக்கு என்ன பரிகாரம்? என்னென்ன பலன்கள்?!

 | 
DEVOTIONAL

சனி பகவான் கர்ம காரகன் என்பதால், பாதிக்கப்பட்ட ராசிக்காரர்கள் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு அல்லது உடை தானம் செய்தல். சனிக்கிழமை தோறும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது. திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற சனி பரிகாரத் தலங்களுக்கு ஒருமுறை சென்று வருதல் நன்மை தரும். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி இன்று மார்ச் 6ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8:31 மணியளவில் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்று பார்க்கலாம் வாங்க.

மேஷ ராசிக்கு ஏழரை சனியின் முதல் கட்டமான விரைய சனி தொடங்குகிறது. சுப விரயங்கள் (வீடு கட்டுதல், விசேஷங்கள்) அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். சனிக்கிழமைகளில் ஐயப்பன் வழிபாடு செய்வது மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குவது நல்லது.

ரிஷப ராசிக்கு 11-ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு சனி வருவதால் இது மிகச்சிறந்த காலமாகும். பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். தொட்டது துலங்கும். பதவி உயர்வு கிடைக்கும். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வழிபட்டு, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவலாம்.

மிதுன ராசிக்கு பத்தாம் இடம் - ஜீவன சனி. தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சனிக்கிழமைகளில் விநாயகர் மற்றும் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

கடகம் ராசிக்காரர்களுகு பாக்கிய சனி - அஷ்டம சனி முடிவு. கடந்த இரண்டரை ஆண்டுகளாக வாட்டி வதைத்த அஷ்டம சனியிலிருந்து கடக ராசியினர் இன்று முதல் விடுபடுகிறார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடன் தொல்லைகள் தீரும். தடைபட்ட சுப காரியங்கள் நடக்கும். குலதெய்வ வழிபாடு மற்றும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வருவது சிறந்தது.

சிம்மம் அஷ்டம சனி ஆரம்பம். சிம்ம ராசிக்கு எட்டாம் இடத்திற்கு சனி வருவதால் இது 'அஷ்டம சனி' காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பயணங்களின் போது நிதானம் அவசியம். தினமும் 'கோளறு பதிகம்' வாசிப்பது மற்றும் சனிக்கிழமை காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது சங்கடங்களைக் குறைக்கும்.

கன்னி ராசிக்கு கண்டக சனி ஆரம்பம். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி அர்ச்சனை செய்வது நல்லது.

துலாம் ஆறாம் இடம் - ருண, ரோக, சத்ரு சனி. எதிரிகள் விலகுவார்கள். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிட்டும். ராஜயோக காலம். ஏழை எளியவர்களுக்கு வஸ்திர தானம் (துணி) செய்வது நற்பலன்களைத் தரும்.

விருச்சிகம் (ஐந்தாம் இடம் - அர்த்தாஷ்டம சனி முடிவு) பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்விக சொத்து பிரச்சனைகள் தீரும். மன நிம்மதி கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது.

தனுசு (அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்) நான்காம் இடத்தில் சனி வருவதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் வரும். அரசமரத்தடி விநாயகரை 9 முறை வலம் வருவது மற்றும் எள் தீபம் ஏற்றுவது நல்லது.

மகரம் (மூன்றாம் இடம் - ஏழரை சனி முடிவு) கடந்த 7.5 ஆண்டுகளாக நீடித்த ஏழரை சனியிலிருந்து மகர ராசியினர் இன்றுடன் முழுமையாக விடுபடுகிறார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் கைகூடும். சகோதரர்களிடையே ஒற்றுமை பலப்படும். சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு மற்றும் ஏழைகளுக்குத் தயிர் சாதம் தானம் அளிக்கவும்.

கும்பம் (வாக்கு சனி - ஏழரை சனியின் இரண்டாம் கட்டம்) கும்ப ராசிக்கு ஜென்ம சனி முடிந்து தற்போது வாக்கு சனியாக இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். பொருளாதார நிலை உயரும். பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குவது மற்றும் சிவ வழிபாடு செய்வது மன அமைதி தரும்.

மீனம் (ஜென்ம சனி - ஏழரை சனியின் உச்சம்) மீன ராசிக்கு சனி பகவான் ராசிக்குள்ளேயே வருவதால் 'ஜென்ம சனி' தொடங்குகிறது. மன அழுத்தம் மற்றும் அலைச்சல்கள் இருக்கும். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை தேவை. சோம்பலைத் தவிர்க்கவும். சனிக்கிழமை திருநள்ளாறு அல்லது அருகில் உள்ள சனீஸ்வரர் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

Tags