இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாராட்டுத் தீர்மானம்!
துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற பயணிகள் விமானத்தைக் கடத்த முயன்ற துணை விமானியின் சதியை தனது அசாதாரண தைரியத்தால் முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரைப் பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற பயணிகள் விமானத்தை அதன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கடத்த முயன்றார். அப்போது விமானி ஸ்மித் மச்சார் பயணிகளின் உதவியுடன் மிகுந்த வீரத்துடன் போராடித் துணை விமானியை மடக்கிப் பிடித்தார்.
பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த எம்பிக்களான ஜோஷ் காட்ஹைமர், டான் பேகன் மற்றும் மைக்கேல் மெக்கால் ஆகியோர் இணைந்து இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். விமானப் பயணிகளின் உயிரைக் காக்க ஸ்மித் மச்சார் காட்டிய துணிச்சலுக்கு இதில் பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தை ஒரு பயங்கரவாதச் செயலாகக் கண்டித்துள்ள அமெரிக்கா, இவ்விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகளை வலியுறுத்தியுள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் தற்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இவரது வீரத்தைப் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.