சாத்தூரில் தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி... காமராஜர் மண்ணில் தாமரை மலருமா?!

 | 
Nayinar Nagendran contests from Sattur constituency... Will the lotus flower bloom on Kamaraj's soil?

தமிழக பாஜக மாநிலத் தலைவராக ஏப்ரல் 2025-ல் பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான திருநெல்வேலியை விடுத்து, விருதுநகர் மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான சாத்தூரில் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

நயினார் நாகேந்திரன் ஏற்கனவே திருநெல்வேலி தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவர் (2001, 2011 அதிமுக சார்பிலும், 2021 பாஜக சார்பிலும்). தற்போது அவர் மாநிலத் தலைவராக இருப்பதால், தென் மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கச் சாத்தூர் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் சார்ந்த சமூக வாக்குகள் கணிசமாக இருப்பது அவருக்கு ஒரு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உறுதியாகியுள்ள சூழலில், சாத்தூர் தொகுதியை பாஜகவிற்குப் பெறுவதில் நயினார் நாகேந்திரன் ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகுதி முன்னாள் முதல்வர் காமராஜர் போட்டியிட்டு வென்ற பெருமைக்குரியது. தற்போது இத்தொகுதியின் எம்.எல்.ஏ-வாக ஏ.ஆர்.ஆர். ரகுராமன் (மதிமுக) உள்ளார். தொழில் நகரமான சாத்தூரில் நிலவும் தீப்பெட்டித் தொழில் பிரச்சனைகள் மற்றும் வேலையின்மை போன்ற காரணிகளை முன்வைத்து பாஜக களம் இறங்கத் தயாராகி வருகிறது.

இன்னும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை என்றாலும், நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் கடந்த சில நாட்களாகக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவது இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. திருநெல்வேலியா அல்லது சாத்தூரா என்ற குழப்பத்திற்கு இன்னும் சில நாட்களில் அவர் முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags