வாக்காளர் அட்டை இல்லைன்னாலும் கவலையில்லை... இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்!

 | 
voter card

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, வாக்குச் சாவடியில் வரிசை எண்ணை அறிந்து கொள்ள வழங்கப்பட்டு வந்த 'புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு' (Photo Voter Slip) பதிலாக, இனி 'வாக்காளர் தகவல் சீட்டு' மட்டுமே வழங்கப்படும். இந்தச் சீட்டில் வாக்காளரின் புகைப்படம் இருக்காது; மாறாக பாகம் எண், வரிசை எண், வாக்குச் சாவடியின் பெயர் மற்றும் வாக்குப் பதிவு நேரம் போன்ற விவரங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.

வாக்காளர்கள் தங்களது அடையாளத்தை நிரூபிக்க அசல் வாக்காளர் அடையாள அட்டையை (EPIC) கட்டாயம் கொண்டு வர வேண்டும். ஒருவேளை வாக்காளர் அட்டை இல்லாதவர்கள், பின்வரும் 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது:

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் (DL), பான் கார்டு (PAN Card), இந்திய கடவுச்சீட்டு (Passport), புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகம், மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்ட அடையாள அட்டை, மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓய்வூதிய ஆவணம், மத்திய/மாநில அரசு ஊழியர்களுக்கான பணி அடையாள அட்டை, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID)

தேர்தல் ஆணையம் வழங்கும் 'வாக்காளர் தகவல் சீட்டு' என்பது உங்கள் வரிசை எண்ணைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே தவிர, அதனை அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தேர்தல் அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், மேற்கண்ட ஆவணங்கள் இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே ஒருவரால் வாக்களிக்க முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) தங்களது அசல் கடவுச்சீட்டை (Passport) மட்டுமே அடையாள ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும். இந்தத் தகவல் சீட்டுகள் வாக்குப் பதிவிற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் விநியோகிக்கப்படும்.

Tags