தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு !
அந்தமான் அருகே நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக் கூடிய இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறக்கூடும் என்றும், அடுத்து உருவாகும் இந்தப் புயலுக்கு ‘அர்னாப்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 24 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.