உக்ரைனில் பேருந்து மீது ரஷ்யா குண்டுவீச்சு: 33 பேர் பலி!
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிரமடோர்ஸ்க் நகரில் பயணிகள் பேருந்து நிறுத்தம் மற்றும் பேருந்துகள் மீது ரஷ்யா நடத்திய பயங்கரமான வான்வழித் தாக்குதலில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் டோனட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிரமடோர்ஸ்க் நகரில் இயங்கிக் கொண்டிருந்த பேருந்துகள் மற்றும் பயணிகள் பேருந்து நிறுத்தம் மீது ரஷ்யப் படைகள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தின.
இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பொதுமக்கள் பலியான நிலையில், உயிரிழப்பு 33 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நடப்பாண்டில் ரஷ்யாவால் நடத்தப்பட்ட மிக மோசமான மற்றும் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் சாதாரணப் பொதுப் போக்குவரத்து முனையத்தை இலக்காக வைத்து ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர் தாக்குதல்கள் காரணமாக அப்பகுதியில் உள்ள கிரமடோர்ஸ்க் மற்றும் ஸ்லோவியன்ஸ்க் நகரங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பிராந்திய ஆளுநர் வாடிம் பிளாஷ்கின் அறிவித்துள்ளார்.