டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி... கட்டிடம் சரிந்து விழுந்து குழந்தை உட்பட 2 பேர் பலி!

 | 
In Delhi building collapsed

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று  திடீரெனக் கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்தது. இதுகுறித்துத் தகவல் அறிந்தவுடன் அவசரகால மீட்புக் குழுவினரும், தீயணைப்புத்துறையினரும் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 6 முதல் 7 பேர் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகின்றன. 

தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகக் கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: கடந்த செப்டம்பர் மாதம் சத்ய நிகேதன் பகுதியில் மாணவர்கள் தங்கியிருந்த 5 மாடி விடுதிக் கட்டடம் இடிந்ததில் மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

பழைய டெல்லியின் ஹவுஸ் காசி பகுதியில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி கட்டுமானப் பணியில் இருந்த 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர். அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 15-ஆம் தேதி பஹர்கஞ்ச் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து பலர் காயமடைந்த நிலையில், தற்போது விவேக் விஹார் பகுதியிலும் இந்தச் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

Tags