"என் பெயரில் நிறைய்ய வதந்திகள் பரவுது... இதயம் 'Fans Fans' என்றுதான் துடிக்குது" - மாஸ் காட்டிய நடிகர் தனுஷ்!

 | 
Dhanush OM movie audio launch

தனது பெயரில் பரப்பப்படும் வதந்திகள் குறித்தும், ரசிகர்கள் காட்டும் பேரன்பு குறித்தும் நடிகர் தனுஷ் சென்னையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியுடனும் ஆவேசமாகவும் பேசியுள்ளார்.  

சென்னையில் நடைபெற்ற 'ஓம்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் தனுஷ், சமீபகாலமாகத் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் வதந்திகளுக்கும் பதிலளித்தார். "என் பெயரில் நிறைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. இவரை அவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள், இவர் பின்னால் இவர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், என்னை இயக்குவது இறைவன், என் பின்னால் இருப்பது எனது அன்பான ரசிகர்கள், என் பக்கம் இருப்பது மக்கள் மட்டும்தான்" எனப் பேசினார். 

"என் வாழ்நாள் முழுவதும் நான் ஒரு 'அண்டர்டாக்' தான். பலர் என்னைக் குறைத்து மதிப்பிடுவார்கள், மட்டம் தட்டுவார்கள். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்... அவர்கள் என்னைக் குறைத்து மதிப்பிட மதிப்பிட, எனக்கே தெரியாமல் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி அண்டர்டாக்காக இருந்து ஜெயிப்பதில் ஒரு தனி கெத்து இருக்கிறது!" என்று குறிப்பிட்டார்.  

ரசிகர் மன்றங்கள் செய்து வரும் நற்பணிகளைப் பாராட்டிய தனுஷ், அவர்களுக்கு முக்கியக் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தார். "ரசிகர்கள் நிறைய நல்ல திட்டங்களைச் செய்து வருகிறீர்கள். அனைத்தையும் நான் கவனித்துத்தான் வருகிறேன். ஆனால் எனது ஒரே ஒரு கோரிக்கை, உங்கள் குடும்பத்திற்குச் செலவழித்தது போக மீதமிருக்கும் பணத்தை மட்டுமே இது போன்ற நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துங்கள்." 

மழைக்காலத் தன்னார்வப் பணி: "வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், எனது ரசிகர்கள் உடனடியாகத் தன்னார்வலர்களாகக் களமிறங்கி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார். 

தனது உரையின் நிறைவாகப் பேசிய அவர், "நாம் என்ன பேசினாலும், என்ன செய்தாலும் சிலர் எதையாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். பேசட்டும்! வழக்கமாக அனைவருக்கும் இதயம் 'லப் டப், லப் டப்' என்றுதான் துடிக்கும். ஆனால், எனது இதயமோ 'Fans, Fans' என்றுதான் துடிக்கும்" என உருக்கமாகப் பேசி அரங்கை நெகிழ வைத்தார். தனுஷின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் பெரும் அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Tags