சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுகிறேன் - நடிகர் அமிதாப் பச்சன் உருக்கம்!
பாலிவுட்டின் முன்னணி மூத்த நடிகரான அமிதாப் பச்சன் (84), மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனது சமூக ஊடகப் பதிவுகளில் இருந்து சில நாட்கள் தற்காலிகமாக ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
வழக்கமாக சமூக வலைத்தளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி, ரசிகர்களுடன் அன்றாடம் தொடர்பில் இருக்கும் அமிதாப் பச்சன், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் சில நாட்கள் முழுமையாக ஓய்வெடுத்து உடல்நலனைத் தேற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளேன். எனவே, என்னால் தற்போது எந்தப் பதிவுகளையும் எழுத இயலவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த திடீர் அறிவிப்பு கோடிக்கணக்கான ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து 'வேட்டையன்' படத்தில் நடித்த அவர், தற்போது 'கல்கி 2898 AD - பாகம் 2' திரைப்படப் பணிகளிலும், 'கோன் பனேகா குரோர்பதி' தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மெகாஸ்டார் அமிதாப் பச்சன் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டும் சமூக வலைத்தளங்களுக்குத் திரும்ப வேண்டும் எனத் திரையுலகினரும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.